Translate

வெள்ளி, 3 ஜனவரி, 2014

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பஞ்சலிங்கம்


ஆதிசங்கரர் கயிலையில் உமையன்னையுடன் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டு களிகொண்டு வணங்கினார் ஸ்ரீசங்கரர். சிவ பெருமானின் அடியிலிருந்து முடிவரை வர்னித்துப்பாடினார். அதில் திருப்தி உண்டாகாமல் மீண்டும் முடியிலிருந்து அடி வரையில் வர்ணணை செய்து இன்னொரு துதி செய்தார். இவை "சிவ பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம்"எனவும் சிவ கேசாதி பாதாந்த ஸ்தோத்திரம் எனவும் வழங்குகின்றன.

சிவபெருமான் தனது அவதாரமான ஆதிசங்கரர் செய்துவரும் அரும் பணியைப் பாராட்டினார். "பஞ்ச லிங்கங்கள்"ஐந்து ஸ்படிக லிங்கங்களை ஆதிசங்கரருக்குத் தந்தார். அவருக்கு அருகே இருந்த சக்தியை துதிப்பதற்கு முடியாமல் சங்கரர் பிரம்மித்து நின்றார். உடனே பரமசிவன் தாமே அம்பிகையை துதித்துச் செய்திருந்த "ஸெளந்தர்யலஹரி"என்ற நூல் சுவடியையும் சங்கரருக்கு வழங்கினார்.


இவற்றைப் பெற்று மிகுந்த பூரிப்போடு சங்கரர் கையிலையிலிருந்து வெளிவந்தார். காவலில் இருந்த நந்திதேவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பாதிசுலோகங்களை அவருக்குக் கொடுத்துவிட்டார். "ஸெளந்தர்யலகரி"யின் முதல் நாற்பத்தியரு சுலோகங்கள் மட்டும்சங்கரர் கையில் தங்கின. மீதமுள்ள ஐம்பத்தொன்பது சுலோகச்சுவடிகளை நந்திதேவர் பெற்றுக்கொண்டார்.

கையிலையைவிட்டு வெளிவந்த நம் ஆசாரியருக்கு இப்போது அம்பிகையைக் குறித்த பிரம்மிப்பு நீங்கிவிட்டது. அவளது அருளால் அவரே புதிதாக ஐம்பத்தொன்பது அற்புதமான சுலோகங்களை இயற்றி "ஸெளந்தர்யலகரி" நூலைப் பூர்த்திசெய்து விட்டார். ஆசாரியரின் பல துதிகளுக்குள் இலக்கியச் சுவையில் சிகரமாக விளங்குவது "ஸெளந்தர்யலகரி"யே ஆகும். அதைப் பாராயணம் செய்வதால் பலவிதமான உபகர நலன்களும் கைகூடும்.


 பசுபதிநாதர் என்ற ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தின் சிறப்புகளுக்கெல்லாம் சிறப்பாக உள்ளது லிங்கத்தின் நான்கு புறங்களில் திசைக்கொன்றாக ஒவ்வொறு முகம் லிங்கத்தின் உச்சியில் அம்பிகையின் வடிவான ஸ்ரீசக்ரம் எழுதிப் பூஜிப்பது இன்னொரு முகத்துக்குச் சமானம்.

மகாவிஷ்ணு பூஜைக்குறிய சாளக்ராமம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியிலேயே கிடைப்பது. சிவபெருமான் உகந்து அணியும் ருத்ராக்ஷமும் அங்குதான் நிறைய காய்க்கிறது. பசுபதி நாதர் கோயில் முழுவதையும் சிவராத்திரியன்று ருத்திராட்சங்களால் அலங்கரித்து, விசேஷ பூஜை புரிவார்கள்.
இத்தனை சிறப்புகள் பொருத்திய பசுபதிநாதத்திற்கு ஸ்ரீசங்கரர் விஜயம் செய்து, ஸ்வாமி தரிசனம் செய்து பேரின்பம் எய்தினார். அங்கு ஆலய வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்தித் தந்தார். சிவபெருமானிடமிருந்து பெற்ற ஜந்து ஸ்படிகலிங்கங்களுள் ஒன்றான முக்திலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீசங்கரர்.

பரமசிவனிடமிருந்து பெற்ற ஐந்து பங்கு லிங்கங்களுள் மற்றொன்றான முக்திலிங்கத்தை கேதாரிநாதத்தில் ஸ்ரீ சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
பாரததேசத்தின் நான்கு திசைகளிலுமாக மொத்தம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. இவற்றில் ஒன்று கேதார்நாத்தில் உள்ளது. ஸ்ரீசங்கரர் இயற்றிய "துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திர"த்தில் கேதாரிநாதனைக் குறிப்பிட்டு வந்தனம் தெரிவிக்கிறார்


இவ்விதமான பல ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து, பின்னர் கங்கா நதி பாயும் சமவெளியை அடைந்தார். அங்கே தம் சிஷ்யர்களுக்குப் பாடம் நடத்தினார். அவர்களுக்கு உபதேசத்தின் மூலம் பல அரிய தத்துவங்களை விளக்கினார். பிற மதவாதிகளுடன் வாதம் செய்து அவற்களை வென்று வேதாந்தக் கருத்துக்களை வேரூன்றச் செய்தார் நம் ஆசாரியர். பாரத தேசமெங்கும் சுற்றி அத்வைதத்தைப் பரப்பிய ஸ்ரீசங்கரர், வடகோடியிலிருந்து தெற்கே வந்து சிதம்பரத்தை அடைந்தார். அங்கே பஞ்சலிங்கங்களில் ஒருவரான மோட்சலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.


மீண்டும் சிருங்ககிரிக்கு எழுந்தருளினார் நம் ஜகத்குரு சங்கராச்சாரியார். பரமசிவன் அளித்த பஞ்சலிங்கங்களில் போகலிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார்.



காமாட்சியிடம் எல்லையற்ற பக்தி கொண்டனர் ஆசாரியர். அவள் வாழும் ஆலயத்தில் 'காமகோடிபீடம்'என்ற மகத்தான சக்திபீடம் உண்டு. காஞ்சிபுரத்தில் தமக்கெனமையமான மடத்தை ஏற்படுத்திக்கொண்ட சங்கரர், அந்த இடத்திற்கு காமாட்சி அம்மனின் பீடத்தின் பெயரான காமகோடிபீடம் என்பதையே தமது மடத்திற்கும் வைத்துக்கொண்டார்.
பஞ்சலிங்கங்களில் எஞ்சிய யோகலிங்கத்தை தனது பீடத்தின் பூஜைக்கென வைத்துக்கொண்டார். இன்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸ்வாமிகளும் பூஜை செய்யும் சந்திர மௌலீசுவ ஸ்படிகலிங்கமே இந்த யோகலிங்கமாகும்.